தேர்போல நடந்துவந்த பாவை---அவள்
தீராத ஆசைதரும் பூவை---என்னில்
தீயாகத்தான் நுழைந்து
பனியாக குளிர்ந்துவிட்ட
கோவை---என் ---தேவை
மெல்லத்தான் கண்திறந்து பார்த்தேன் –அவள்
மென்னழகை என்னுள்ளே வார்த்தேன் –பூந்
தளிராக சிரிக்கின்றப்
பூவுதட்டு புன்னகையில்
வேர்த்தேன் –கவி---சேர்த்தேன்
பிறைநெற்றி நிலவாகப் பொட்டு ---காதல்
பித்தாக்கும் காந்தவிழி மொட்டு---செம்
மாதுளையும் மாங்கனியும்
சேர்ந்தமைந்த தேனிதழ்
தொட்டு ---மின்னல் –வெட்டு
கவிகோடி படைக்கின்ற அரங்கம் ---தமிழ்
கற்பனையை அள்ளுகின்ற சுரங்கம் –அந்த
அழகுமயில் அருகிருக்க
பழகாமலா என்மனசு
உறங்கும்---பொழுதும்---கிறங்கும்
