Sunday, 24 June 2012

ஓரங்க நாயகன்....

ஓரங்க நாடக நாயகனாய்
அவன்.......

பூக்கள் எல்லாம்
இவனுக்காகவே மாலையானதோ
மலையாய் மலையாய் மாலைகள்

இவ்வளவு ரசிகர்களை
இவ்வளவு நாள் பார்த்ததில்லை
இவன்....

இவன் கர்வன்
எவர் சொல்லையும்
காதில் போட்டுக்கொள்ள
காது கொடான்.....

உள்ளுக்குள்
ஆயிரம் பூரிப்பு
எதிரிகளும் இவனைத் தேடி

முரண்பாடு
வாங்கியவன் சிரிக்கிறான்
கொடுத்தவன் அழுகிறான்
இனி
எவன்பாடு

நேற்று
இன்று
நாளையென்ற
சூழல்வலையில்
இவன் இல்லை

ஏனெனில்
இவன் இல்லை
பிணம்

Saturday, 23 June 2012

நீ சூரியன்..........!


தீக்கூட்டீல்......!
எப்படி
தேன்கூட்டுக்கு சம்மதித்தாய்

இடிதாங்கி நீ
கிளிவந்து உட்காந்தா
இடிந்து போவாய்

காட்டாற்று   வெள்ளத்துக்கு
கைவளையின்
சிறையெடுப்பா?

காடுபுரட்டும் காற்று
கூட்டுக்குள் முடஙகாது

கைவீசி
மெய்பேசி
நெடுந்தூரம் நட.......!
உனக்கான உலகம் வேறு

வானத்தின் கீழ்
உனது வீடு
கோடுகளில்லாத தேசம்
உன்னுடையது

நீ
உச்சி சூரியன்
ஊர்மெச்ச ஒளிவீசு........!











Friday, 22 June 2012

சுமைத் தாங்கும் மலர்கள்

மென்மையின் பூரணங்கள்
வறுமைதுடைக்க...
கிழிந்திடும்
பட்டுத்தோரணங்கள்

கந்தகத்தீயில்
காசுக்காய் பொசுங்கும்
சந்தனப் பூக்கள்

தலைவாழைக்கு
நிழலாக.....
வெயிலில் கறையும்
பக்கவாழைகள்

வயிறுகழுவ
வட்டில்கழுவும்
தொட்டில் பூக்கள்

புத்தகம்தேடி
பூக்கும்வயதில்
சிப்பிகள்விற்று
சிதைந்திடும் முத்துக்கள்

சுகத்தில் முளைத்து
சுதந்திரம் தொலைத்த
தேசமிழந்த தேசியகீதங்கள்

முதலில்
குழந்தையும் தெய்வமும்
என்ற வார்த்தையை
மறுபரீசீலனை செய்யனும்.

இவனை விட்டுவிடுங்கள்........!

இவனை
விட்டுவிடுங்கள்

இவன் 
பூமிக்கு  பாரமானவனல்ல
பூமியும்
இவனுக்கு பாரமானதல்ல

இவன்
பூமியின் ஆர்வலன்
மானுட காவலன்

பூக்களின்  குழந்தை
சூரியனை ஈனுபவன்
இவனை விட்டுவிடுங்கள்

மனிதர்களின்
இறுக்கத்தில் இருந்தாலும்
ஏகாந்த நாயகன்

சராசரிகளோடு
சரிவரமாட்டான்

நிலவின் ஒளி
நீரின்வெளி
மேகத்தின் துளி
எழுதுகோல் உளி
இதுபோதும்  இவனுக்கு
இவனை விட்டுவிடுங்கள்

இவன்
சாவுத்தின்னும்  சாதியல்ல
சாவைத்தின்னும்  சாதி
இவனை விட்டுவிடுங்கள்
















காதல்........!..

நிலா  வெளிச்சம்
நெடுந்தூரப் பயணம்
நீயும் நானும்
விரல்பிடித்த மலர்களாய்
கவிதை பேசிக்கொண்டே

நீ சிரிக்கிறாய்
நிலா எட்டிப்பார்க்கிறது
நீ வெட்கப்படுகிறாய்
மேகம் திரைப்போடுகிறது

அரவம் கழுவிய
அழகுப்பொழுதிலும்
தனிமையின்  தாகப்பொழுதிலும்
நீ நீயாகவும்  நான் நானாகவும்
காதல்  கற்புடையது
என்று உணர்வார்கள்
நம் காதலால்







Thursday, 21 June 2012

மனசு......!

ஆழ்மனதில்
உன் நினைவின் கிள்ளல்

நீ பேசிய
ஒவ்வொரு வார்த்தையும்
என் எதிர்காலம் காட்டும்
கண்ணாடியாய்...........

என் இருள்வெளியெங்கும்
வெளிச்சங்களை
விசிறியடித்தவள் நீ

என் கனாசாலையில்
பூக்கள் குலுங்க
சிரிப்பவள் நீ

என் நினைவோடு
எப்போதும்
இருப்பதால்  நீயும் கவிதையே

தூரமாய்தான் இருக்கிறாய்
உனக்கும் எனக்கும்
இடைவெளி அதிகம்
அருகருகே மனசு...........!
























வேர்கள்.....!

ஓங்கி  வளர்ந்த.........!
நிழல் தூவும்   அடர்ந்த மேகங்களாய்
அழகு மரம்

எத்தனையோ கிளைகள்
எத்தனையோ இலைகள்
சோலை நிழலும்  சொக்கிப்போகும்
சுதந்திர நிழல்
சுந்தரமாய்  தரும்   சுதந்திர மரம்

எத்தனையோ
உயிர்கள்......எத்தனையோ  வலிகள்
எத்தனையோ  கனவுகள்
வேர்களாய்........

ஆமாம் ஆமாம்
வேர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை
நிழல்கள்
விழுங்கப்படுகிறதென்று......!

பனித்துளி.......!

எந்த கோதை
கோலமிட..........
ரா முழுதும் கண்விழித்து
இத்தனை புள்ளிகள்
இட்டிருக்கிறாள்  வானமகள்

இருக்கட்டும்...... இருக்கட்டும்.......!

என்னையே
உருக்கி  கவிதைகள்
எழுதிவைக்கிறேன்.......!
பத்துப்பைசாவுக்குத்  துப்பற்றவன்
என்று துப்புகிறார்கள்
இருக்கட்டும் இருக்கட்டும்
என்னை விட
என் கவிதைகளைக் காப்பாற்றிக்கொள்வேன்
அவர்களிடமிருந்து.......!

நானே..........!

நானே நிலம்
நானே விதை
நானே மழை
நானே உழவன்
என் பெயர் கவிதை........!

நொடிகள் போதுமடி!

நீண்டக் கருவெளியாய்..........
நீளுதென் நினைவு

நீ கடக்கும்
துளிப்பொழுதில்.....
துளிர்விடும் என்னெஞ்சம்

பார்க்கும் விழிகளோடு
நிமிடங்களும்
என்னைத் தின்ன....

நொடிகள் போதுமடி
உன் தரிசனம்
என்னில் நீ நிறைய.