Thursday, 8 May 2014

நெருப்பின் மகனே.....


நெருப்பின் மகனே....!
என் இளைய சொந்தமே

தீ வசிக்கும் கண்ணில்
என்ன???
நீர் வசிப்பு

கவலைத்தின்ற மிச்சமாய்
உன் கண்கள்
உன் அழகுமுகத்தில் ஏன்?
அச்சரேகைகள்

இலை விழுந்ததுக்கு
கிளை விழுந்ததாய்
எந்த மரமும் வேர் அறுப்பதில்லை

சின்னச்சின்ன தோல்விக்கும்
சிரம் கொடுப்பது
நாகரிக நடையாகிவிட்டது

தோல்வியென்பது
துவைக்கும்
கிழிக்காது

துவைப்பதுஎன்பது
சுத்தப்படுத்தவே

தோல்விக்கண்ணாடியில்
வெற்றியின்
முகம் பார்க்கலாம்

நீ உடையாமல் இருந்தால்
உடையாதிரு....


Saturday, 14 July 2012

அவள்....!


தேர்போல நடந்துவந்த பாவை---அவள்
   தீராத  ஆசைதரும் பூவை---என்னில்
தீயாகத்தான்  நுழைந்து
பனியாக குளிர்ந்துவிட்ட 
கோவை---என் ---தேவை

மெல்லத்தான்  கண்திறந்து  பார்த்தேன் அவள்
  மென்னழகை என்னுள்ளே வார்த்தேன் பூந்
தளிராக  சிரிக்கின்றப்
பூவுதட்டு புன்னகையில்
வேர்த்தேன் கவி---சேர்த்தேன்

பிறைநெற்றி  நிலவாகப் பொட்டு ---காதல்
 பித்தாக்கும்  காந்தவிழி மொட்டு---செம்
மாதுளையும்  மாங்கனியும்
 சேர்ந்தமைந்த  தேனிதழ்
தொட்டு ---மின்னல் வெட்டு

கவிகோடி  படைக்கின்ற அரங்கம் ---தமிழ்
  கற்பனையை  அள்ளுகின்ற சுரங்கம் அந்த
அழகுமயில் அருகிருக்க
பழகாமலா என்மனசு
 உறங்கும்---பொழுதும்---கிறங்கும்

ஒரு கவிஞன்...!





சூரிய விதையை விதைப்பான் பூமி
சூழும் இருளை அறுப்பான்---அவன்
சீரிய வாழ்வினில் வறுமை நசுக்க
தினம்தினம் புழுவாய் தவிப்பான்


கூரிய தமிழ்சொல் எடுப்பான் தீயில்
ஊறிய கவியை கொடுப்பான் அவன்
பாடியப் பாட்டினில் பசியிரு க்காது
வாடிய வயிறாய் படுப்பான்

எரிபுயல் போலவே நடப்பான் -----உலகைப்
புரட்டிடும் கவியைப்  படைப்பான் ---அவன்
ஏளனப் புழுதியை என்றும் ஏற்று
எளிமையின் நிழலாய் கிடப்பான்

இவந்தான் பூமியின் வேந்தன் தமிழ்
கவியால் ஈர்க்கும் காந்தன் இவன்
வாழும் போது மதிப்புக ளில்லை
மண்ணில் பாவ மாந்தன்.....!



Wednesday, 4 July 2012

விவசாயம்

ஆலமர விழுதொடிச்சி
ஆரமர பல்லு தொளக்கி
ஆளுயர தொட்டியில்
மீனப்போல நான்குளிச்சி
தும்பபூவா துண்டெடுத்து
நோவாம நான் தொடச்சி
காலநேர கஞ்சிக்காக
சோலக்காட்டில் காத்திருக்கேன்

ஆழாக்கு அரிசியத்தான்
அவசரத்தில் கூழாக்கி
காரத்துக்கு ஊறுகாவ
பச்சைப்பயிரில் அறைச்செடுத்து
மேலாக்கப் போத்துக்கொள்ள
மாத்து துணி கிடையாது
நோகாம நான் துவைச்சி
கிழியாம காயவச்சேன்
கிழிஞ்சிபோன விவாசயத்த
தைக்கவேணும் பொறுங்கமச்சான்

வெட்கப்பூ

வாசப்பூ மேனிக்காரி
ரோசாப்பூ உதட்டுக்காரி
ஆசப்பூ வச்சிருக்கேன் ராசாத்தி
ரோசப்பூ உனக்கெதுக்கு நீவாடி

முல்லைப்பூ விழிக்காரி
இல்லைப்பூ இடைக்காரி
தொல்லைப்பூ நான் கொடுக்க ராசாத்தி
கொல்லைப்பூ உனக்கெதுக்கு நீவாடி

வாடாப்பூ நானிருக்கேன்
வாடும்பூ சூடிக்கிற
கூடாப்பூ உனக்கெதுக்கு
கூடும்பூ நானிருக்க---வெட்க
கூடாப்பூ உனக்கெதுக்கு நீ வாடி

Sunday, 24 June 2012

ஓரங்க நாயகன்....

ஓரங்க நாடக நாயகனாய்
அவன்.......

பூக்கள் எல்லாம்
இவனுக்காகவே மாலையானதோ
மலையாய் மலையாய் மாலைகள்

இவ்வளவு ரசிகர்களை
இவ்வளவு நாள் பார்த்ததில்லை
இவன்....

இவன் கர்வன்
எவர் சொல்லையும்
காதில் போட்டுக்கொள்ள
காது கொடான்.....

உள்ளுக்குள்
ஆயிரம் பூரிப்பு
எதிரிகளும் இவனைத் தேடி

முரண்பாடு
வாங்கியவன் சிரிக்கிறான்
கொடுத்தவன் அழுகிறான்
இனி
எவன்பாடு

நேற்று
இன்று
நாளையென்ற
சூழல்வலையில்
இவன் இல்லை

ஏனெனில்
இவன் இல்லை
பிணம்

Saturday, 23 June 2012

நீ சூரியன்..........!


தீக்கூட்டீல்......!
எப்படி
தேன்கூட்டுக்கு சம்மதித்தாய்

இடிதாங்கி நீ
கிளிவந்து உட்காந்தா
இடிந்து போவாய்

காட்டாற்று   வெள்ளத்துக்கு
கைவளையின்
சிறையெடுப்பா?

காடுபுரட்டும் காற்று
கூட்டுக்குள் முடஙகாது

கைவீசி
மெய்பேசி
நெடுந்தூரம் நட.......!
உனக்கான உலகம் வேறு

வானத்தின் கீழ்
உனது வீடு
கோடுகளில்லாத தேசம்
உன்னுடையது

நீ
உச்சி சூரியன்
ஊர்மெச்ச ஒளிவீசு........!